TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - தேனீ விருதாளர்கள்

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

முத்தமிழ்த் தேனீ விருதாளர்


முனைவர் நா. சுலோசனா

விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், காக்கிவாடன்பட்டி என்னும் கிராமத்தில் ச. நாராயணசாமி - நா. ஜெயலட்சுமி இணையருக்கு ஐந்தாவது மகளாக 1975ஆம் ஆண்டு ஏப்பிரல் 11இல் பிறந்தவர். பள்ளிக் கல்வியினை விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டத்திலுள்ள ஆலங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் வழியில் பயின்றவர். நா. கோவிந்தராஜ் அவர்களை வாழ்க்கைத் துணையாகவும், பெண் பிள்ளைகளான மதிவதனி, எழிலரசி ஆகியோரின் ஒத்துழைப்பினாலும், உறுதுணையினாலும் திருமணத்திற்குப் பின்பு இளங்கலை, முதுகலைத் தமிழ் இலக்கியம், மொழியியல், எம்.ஃபில்., பிஎச்.டி., ஆகியபட்டங்களை மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் பெற்றிருக்கிறார். பல்கலைக்கழக மானியக்குழு நடத்தும் தேசியத் தகுதித் தேர்வில் (UGC/NET) இரண்டு முறை தேர்ச்சி பெற்றுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியிலுள்ள கோ. வேங்கடசாமி நாயுடு கல்லூரி, செ. சீ. துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரி மற்றும் விருதுநகர் மாவட்டம் சிவகாசி, அய்ய நாடார் சானகி அம்மாள் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் உதவிப்பேராசிரியராகப் பணியாற்றியவர். 2013 முதல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் மொழியியல் புலத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

பல்வேறு கல்லூரிகளில் பாடத்திட்ட வல்லுநராகவும், முத்துக்கமலம், ஆய்வுச்சுடர், சன்லாக்ஸ், தமிழ்மொழி மற்றும் தமிழ் இலக்கியம் பன்னாட்டு ஆய்விதழ் (IJTLLS) போன்ற ஆய்விதழ்களில் ஆசிரியர் குழு மற்றும் ஆலோசனைக் குழுவிலும், உலகத் தமிழ்ச் சங்கம், செந்தமிழ் அறக்கட்டளை மற்றும் பாவாணர் கோட்டத்தில் உறுப்பினராகவும் உள்ளார்.

கருத்தரங்குகள் மட்டுமல்லாது தமிழியல், சன்லாக்ஸ், தமிழ்மொழி (ம) தமிழ் இலக்கியம் பன்னாட்டு ஆய்விதழ் (IJTLLS), சர்வதேசத் தமிழ் ஆய்விதழ், மணற்கேணி, ‘உங்கள் நூலகம்’, ‘திணை’, செந்தலைக்குருவி’, ‘கணையாழி’, ‘காக்கைச் சிறகினிலே’, ‘தமிழ்ப் பொழில்’, போன்ற அச்சு இதழ்களிலும் முத்துக்கமலம், ஆய்வுச்சுடர், தமிழ் ஆதர்சு.காம் போன்ற இணைய இதழ்களிலும் தமிழியல், தமிழ்மொழி மற்றும் சமூகம் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளையும் படைப்புகளையும் எழுதி வருகிறார்.

இவர் எழுதிய ‘அண்ணாவின் இலக்கியப்பணி’ எனும் கட்டுரை சிவகாசி, அய்யநாடார் சானகிஅம்மாள் கல்லூரியில் (2012-2016) இளங்கலை, இளம் அறிவியல் படிக்கும் மாணவர்களுக்குத் தமிழ் உரைநடைப் பாடத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

தொண்ணூறுக்கும் மேற்பட்ட பன்னாட்டு மற்றும் தேசியக் கருத்தரங்குகளில் கலந்துகொண்டு ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியுள்ளார். ஐம்பதுக்கும் மேற்பட்ட பயிலரங்கம் மற்றும் கருத்தரங்குகளில் ஆய்வு வளமையராகப் பயிற்சி அளித்துள்ளார். பல மாநாடுகளில் கலந்துகொண்டவர். கருத்துரையாளராகக் கருத்தரங்கம், பயிலரங்கம் மட்டுமல்லாது தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், மாவட்டக் கல்வியியல் பயிற்சி நிறுவன முதல்வர்கள், முதுநிலை விரிவுரையாளர்கள் மற்றும் விரிவுரையாளர்களுக்கானப் பயிற்சிப் பட்டறையில் ‘‘21ஆம் நூற்றாண்டில் கற்பித்தலிலுள்ள சவால்களை எதிர்நோக்கல்’’ (understanding the pedagogical challenges of 21st Century), திறன் மேம்பாட்டுப் பயிற்சி’’ (Capacity building) ‘‘தமிழ்மொழிக் கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள்’’ எனும் பொருண்மையிலும் மலேசியத் தமிழாசிரியர்களுக்குத் ‘‘தமிழ்க் கற்பித்தலில் புதிய உத்திகள்’’ மலேசிய கல்வியியல் மாணவர்களுக்குத் ‘‘தமிழ்க் கற்பித்தலில் அடிப்படைத் திறன்கள் மேம்பாடு’’, சென்னை, மாநகராட்சிப் பள்ளித் தமிழாசிரியர்களுக்குத் ‘‘தமிழ்க் கற்றல் கற்பித்தலிலுள்ள சிக்கல்களும் தீர்வுகளும்’’ எனும் பொருண்மைகளில் கருத்துரையாளராகக் கலந்து கொண்டு கருத்துரையாற்றியுள்ளார்.

ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்ட மாணவர்களுக்கு ஆய்வு நெறியாளராக ஆய்வுப்பணியை மேற்கொண்டு வருகிறார். இவரது நெறியாள்கையின்கீழ் ஏழு பேர் முனைவர் பட்டமும் இருபத்து மூன்று மாணவர்கள் ஆய்வியல் நிறைஞர் (M.phil) பட்டமும், 3 பேர் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளனர்.

பெரியாரியம்வழி இலக்கியங்களை ஆய்ந்து ‘திராவிட வேரும் விழுதுகளும்’, ‘செவ்விலக்கியச் சாரம் (பன்முகநோக்கில்)’, இலக்கணம்-இலக்கியம்-மருத்துவம் (குறிஞ்சிப்பாட்டு மலர்த்திரள்), ‘பெருஞ்சித்திரனாரின் மொழி-இனம்-நாடு’,‘பாவாணர் கோட்டத்தின் ஆக்கமும் வளர்ச்சியும்’, ’தமிழ்மொழியும் தகவல் பரிமாற்றமும்’, ‘குறுந்தொகையில் ஓரெழுத்து - பொருள் நுட்பம்’ என ஏழு ஆய்வு நூல்களின் நூலாசிரியராகவும், பதிப்பாசிரியர், பொதுப் பதிப்பாசிரியர் எனும் நிலையில் 30க்கும் மேற்பட்ட நூல்களையும் வெளியிட்டுள்ளார்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நிறுவப்பட்டுள்ள தினமணி அறக்கட்டளை, தெ. பொ. மீ. அறக்கட்டளை, கலா நிலையம் டி. என். சேசாசலம் அறக்கட்டளை, இதழாளர் ஆதித்தனார் அறக்கட்டளை, அறிவுக்கரசு ரஞ்சிதம் அறக்கட்டளை மற்றும் டாக்டர் செ. அரங்கநாயகம் அறக்கட்டளை ஆகியவற்றிற்குப் பொறுப்பாளராக உள்ளார். அறக்கட்டளைச் சொற்பொழிவுகளின் வழி, பதினைந்துக்கும் மேற்பட்ட நூல்களைப் பொதுப்பதிப்பாசிரியராகப் பதிப்பத்துள்ளார். 30க்கும் மேற்பட்ட அறக்கட்டளைச் சொற்பொழிவுகளை ஒருங்கிணைத்து நடத்தியுள்ளார்.

‘தமிழ் மென்பொருள்களின் பயன்பாடு’ எனும் பயிலரங்கைத் தமிழ் இணையக் கல்விக்கழகத்துடன் இணைந்து நடத்தியுள்ளார். கவிதை, சிறுகதை - புதினம்படைப்பாளுமை’, ‘தமிழல்லாதோருக்குத் தமிழ்மொழிக் கற்பித்தல் புதிய அணுகுமுறைகள்’, ‘தமிழ் இலக்கியங்களில் வாழ்வியல் விழுமியங்கள்’, ‘தனித்தமிழின் நோக்கும் போக்கும்’, ‘தமிழியல் ஆய்வு வரலாறும் வளர்ச்சிப் போக்குகளும்’, ‘தமிழ்மொழி வளர்ச்சியில் மொழியியலின் பங்கு’, ‘மொழியியல் வகைமைகளும் கோட்பாடுகளும்’, ‘தொல்லியல் சான்றும் தமிழர் பண்பாடும்’, ‘நாட்டுப்புறக் கலைகளும் கலைஞர்களும்’, ‘பாரதியின் ஆளுமையில் பெண்கள்’, ‘தமிழிலக்கியங்களில் சமுதாய மொழியியல் அணுகுமுறை’, ‘பல்துறை நோக்கில் செவ்வியல் இலக்கியங்கள்’, ‘புதிய அணுகுமுறைகளின்வழித் தமிழ்மொழிக் கற்பித்தல் முறைகளும் கருத்துப் புலப்பாடும்’ அகராதிகள், வட்டார வழக்குகள், என்று பல்வேறு பொருண்மைகளில் 35 பன்னாட்டு மற்றும் தேசியக் கருத்தரங்கங்கள் மட்டுமல்லாது பல்வேறு நிகழ்வுகளை ஒருங்கிணைத்து நடத்தியுள்ளார்.

தமிழக அரசின் நிதி நல்கையில் சமுதாய மொழியியல் நோக்கில் உறவுமுறைச் சொற்கள் குறித்த உயராய்வுத் திட்டப்பணியினை நிறைவு செய்துள்ளார். தமிழக அரசின் நிதி நல்கையில் பெரும்புலவர் பாரதியாரின் நினைவு நூற்றாண்டைப் போற்றும் வகையில் தமிழக அரசு அறிவிப்புச் செய்த பெருந்திட்டப்பணியான மகாகவி பாரதியாரின் சிறந்த நூறு பாடல்கள் தமிழ் - ஆங்கிலம்-வண்ண ஓவியங்களுடன் ஏழிலேடாக (காஃபி மேசைப் புத்தகம்) வெளிவரும் பணியைச் செய்து வருகிறார்.

தமிழ்நாடு அரசின் ’இளந்தமிழ் ஆய்வாளர்’ விருது பெற்றவர். பெரியாரியத்தை இலக்கியத்தின் வழி ஆராய்ந்து வெளியிட்ட ‘திராவிட வேரும் விழுதுகளும்’ நூலுக்குப் பெரியாரிய ஆய்வு நடுவண் மையம் வழங்கிய ‘பெரியாரியல் விருது’, ஆய்வுப் பணிக்களுக்காக ‘ஆய்வுச்சிற்பி’, கம்பன் கழகம் வழங்கிய ‘தமிழ்ச்சுடர்’, ‘தமிழ்ப்பணிச் செம்மல்’, ’சிறந்த ஆசிரியர் விருது’, ‘ஆய்வுமாமணி’ போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார். இலக்கண இலக்கியங்களை ஆய்ந்து கற்றுத் தேர்வதில் முனைப்புடன் இருப்பவர். பழந்தமிழ் சொற்களை ஆராயும் விதமாக 100க்கும் மேற்பட்ட பதிவுகளை மொழி அறிவோம் / mozhi arivom என்னும் வலையொளியின் வாயிலாகப் பதிவு செய்துள்ளார். கரிசல் வட்டாரச் சொலவடைகளைத் திரட்டும் பணியிலும் நாட்டம் கொண்டு ஆய்வுப்பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இவருக்கு தேனித் தமிழ்ச்சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து “முத்தமிழ்த் தேனீ” எனும் விருதினை வழங்கிச் சிறப்பித்திருக்கிறது.

முத்தமிழ்த் தேனீ விருது



தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து 9-7-2022 அன்று தேனி, வெஸ்டர்ன் காட்ஸ் ஓட்டலில் நடத்திய ‘இணைய வழி தமிழ் உரைகள் -150 நிறைவு விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா’வில் இவருக்கு, தமிழ்ப் பல்கலைக்கழக மாண்பமைத் துணைவேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன் அவர்களால் ‘முத்தமிழ்த் தேனீ விருது' வழங்கிச் சிறப்பிக்கப்பெற்றது.



© 2018-2025 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ்

(www.muthukamalam.com)
(ISSN: 2454-1990)