TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - தேனீ விருதாளர்கள்

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

சொற்சுவைத் தேனீ விருதாளர்


முனைவர் அரங்க மல்லிகா

திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவானைக்காவல் அருகில் உள்ள நடுக்கொண்டயம்பேட்டை கிராமத்தில் மூ. ரெங்கசாமி - அஞ்சுகம் இணையரின் மூன்றாவது மகளான மல்லிகா என்ற அரங்க மல்லிகா 1962 ஆம் ஆண்டில் பிறந்தார். தொடக்கப்பள்ளிப் படிப்பைக் காசி செட்டியார் பள்ளியிலும், உயர்நிலைப் பள்ளிப்படிப்பை ஸ்ரீரங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் பயின்று, பழைய பி.யு.சி வகுப்பையும் , இளங்கலை பட்டப்படிப்பையும் சீத்தாலட்சுமி இராமசாமி கல்லூரியிலும் முடித்தார். முதுகலை தமிழ் படிப்பை திருச்சி பிசப் ஹீபர் கல்லூரியிலும், ஆய்வியல் நிறைஞர் பட்டத்தினைப் பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலும் பயின்றார். அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழக மானியக்குழு நடத்தும் Junior Research fellowship தேர்வில் வெற்றி பெற்று முனைவர் தேவதத்தா நெறியாளுகையில் முனைவர் பட்டம் பெற்றார்.

1996 ஆம் ஆண்டில் சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் தமிழ்த்துறை விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்த இவர், கடந்த நான்கு ஆண்டுகளாகத் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார். 2016 - 2020 வரையிலான நான்கு ஆண்டு காலம் எத்திராஜ் மகளிர் கல்லூரியின் மகளிர் மைய இயக்குநராக இருந்து பல்வேறு பன்னாட்டுக் கருத்தரங்கங்களை நடத்தி இருக்கிறார். மாணவர்களின் மனங்கவர்ந்த பேராசிரியர் என்ற பெருமைக்குரியவர்.

தமிழ் நாவல்களில் இரண்டாம் தரக்குடி நிலையும் மீட்சியும் என்ற தலைப்பில் ஆய்வு நிகழ்த்தி, பின்னர் அந்த ஆய்வேட்டைத் தமிழ் இலக்கியமும் பெண்ணியமும் என்ற தலைப்பில் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வாயிலாக 2002 ஆம் ஆண்டில் நூலாக வெளியிட்டிருக்கிறார். இவர் பெண்ணியம் தமிழ்ச்சூழலில் ஆய்வாளர்கள் மத்தியில் பெரும் புழக்கத்திற்கு வர இந்நூலுக்கு முதன்மை இடம் உண்டு. அதனைத் தொடர்ந்து, பெண்ணிய அரசியலைத் தீவிரமாகப் பேசும் நூலாக, ‘பெண்ணியக்குரல் அதிர்வும் தலித் பெண்ணிய உடல்மொழியும்’ என்ற தலைப்பில் ஒரு நூல் எழுதினார். பெண் விடுதலையை அரசியலாகப் பார்க்க வேண்டும் என்ற பெண்ணியக் கருத்தியலை முன் வைத்து இவரது 9 நூல்கள் வெளிவந்துள்ளன. நீர் கிழிக்கும் மீன், பனையெனவே நிற்கிறாள் ஆகிய இரண்டும் கவிதை நூல்கள். மாணவர்களுக்கு வழிகாட்டலும் ஆலோசனை கூறலும் என்று ஒரு நூல் சில கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. புலரும் அறத்தின் காலை என்ற தன் வரலாறு நூல் கலைஞர் பதிப்பகம் வழியாக வெளிவந்துள்ளது.

பல கல்லூரிகளில் பாடத்திட்ட வல்லுநர் குழு உறுப்பினர், பல்கலைக்கழகக்கட்டிட மதிப்பீட்டாளர், தமிழக அரசின் சிறந்த நூல் தேர்வுக்குழு உறுப்பினர், தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழுப் பேரவை உறுப்பினராகவும் இருந்து வருகிறார். மேனாள் தமிழக அரசின் முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் வேண்டுதலில் 2009 ஆம் ஆண்டில் கோயம்புத்தூரில் நடத்தப்பெற்ற உலகத்தமிழ் மாநாட்டில் பட்டிமன்றப் பேச்சாளராக, ஆய்வு மதிப்பீட்டுக்குழு உறுப்பினராக இருந்திருக்கிறார். தற்போதையத் தமிழக முதல்வர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்களின் பரிந்துரையில் கலைஞர் எழுதுகோல் விருது தேர்வுக்குழு உறுப்பினராகவும் இருக்கிறார். மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, தைவான் ஆகிய நாடுகளில் சிறப்பு ஆய்வறிஞராகப் பங்கேற்றிருக்கிறார். மேடைப் பேச்சாளர், கவிஞர், ஆய்வாளர், பெண்ணியத் திறனாய்வாளர், தலித் பெண்ணியம், பாலியல் அரசியல், பாலினப்பாகுபாடு, பெண்மொழி, பங்கு நிலைப் பரிமாணம் என்ற பெண்ணியச் சொற்களை தமிழ்ச்சூழலில் அறிமுகப்படுத்தியவர். மாணவர்களின் ஆலோசகர், ஆயிரம் மேடைகளுக்கு மேல் பெண் உடல் அரசியலைத் தீவிரமாகப் பேசுபவர். தவறு என்றால் பயமில்லாது சுட்டிக் காட்டுபவர், மணிமேகலைக் காப்பியம் முழுவதும் தொடர் சொற்பொழிவாற்றி, இன்று பெளத்தத்தில் ஆழமான ஆய்வுகளை நிகழ்த்தி இருக்கிறார். பெளத்தத்தில் ஆழங்கால் பட்ட பெண்களில் முதன்மையர்.

25 வருடங்களாகக் கிராமப்புற மாணவ மாணவியருக்குத் தடைப்படும் பள்ளிப்படிப்பை மீட்டெடுப்பதும், கல்விக்கு வழிகாட்டுவதும் கல்வி உதவித்தொகை வழங்குவதும் அரங்க மல்லிகாவின் தனிச்சிறப்பு. பல்வேறு அரசியல் கட்சிகளில் உள்ள பெண்களுக்கு அரசியல் விழிப்புணர்வு சொல்லித் தருவதும் சுய உதவிக்குழு பெண்களுக்கு வாழ்வியல் வழிகாட்டுவதும் கூடுதல் பலம்.

இத்தகைய சிறப்புடைய இவருக்கு தேனித் தமிழ்ச்சங்கமும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகமும் இணைந்து " சொற்சுவைத் தேனீ " எனும் விருதினை வழங்கிச் சிறப்பித்துள்ளது.

சொற்சுவைத் தேனீ விருது



தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து 9-7-2022 அன்று தேனி, வெஸ்டர்ன் காட்ஸ் ஓட்டலில் நடத்திய ‘இணைய வழி தமிழ் உரைகள் -150 நிறைவு விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா’வில் இவருக்கு, தமிழ்ப் பல்கலைக்கழக மாண்பமைத் துணைவேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன் அவர்களால் ‘சொற்சுவைத் தேனீ விருது' வழங்கிச் சிறப்பிக்கப்பெற்றது.


© 2018-2025 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ்

(www.muthukamalam.com)
(ISSN: 2454-1990)