TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - தேனீ விருதாளர்கள்

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

சொற்சுவைத் தேனீ விருதாளர்


முனைவர் க. மலர்விழி

வேலூர் மாவட்டம், ஊசூரில் பொ. கமலநாதன் - க. சுசீலா இணையருக்கு, 1964 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் நாளில் மகளாகப் பிறந்தவர் க. மலர்விழி. இவருக்கு ஹேமந்த் என்ற மகனும், திவ்யதர்ஷினி என்ற மகளும் இருக்கின்றனர். கன்னட மொழியில் முதுகலைப்பட்டம் பெற்ற இவர், ஆந்திர மாநிலம், குப்பம், திராவிடப் பல்கலைக்கழகத்தில் "மாஸ்தி மற்றும் புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஒரு ஒப்பீடு” எனும் தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார். இவருக்கு கன்னடம், தமிழ், தெலுங்கு, மலயாளம், இந்தி, ஆங்கிலம் என்று ஆறு மொழிகள் எழுத, பேசப் படிக்கத் தெரியும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஜப்பானிய மொழியில் தொடக்க நிலைச் சான்றிதழைப் பெற்றிருக்கிறார்.

1988 ஆம் ஆண்டில் ஆசியன் கல்வி (Asian Studies) அமைப்பின் பன்மொழி அகரமுதலி திட்டத்தில் ஆய்வு உதவியாளராகப் பணியைத் தொடங்கிய இவர், 1990 ஆம் ஆண்டு வரை பெங்களூர், வித்தியா வாஹினி கல்லூரியில் கன்னட மொழி விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்து 2000 ஆம் ஆண்டு வரை அங்கு பணியாற்றினார். அதன் பிறகு, 2001 ஆம் ஆண்டில் பெங்களூர், பிரசிடென்சி கல்லூரியில் கன்னட மொழித் துறைப் பேராசிரியராகப் பணியாற்றினார். பின்னர் அங்கிருந்து பிரெசிடென்சி பல்கலைக்கழகத்துக்கு மாற்றப்பட்டு, கன்னட மொழித்துறைப் பேராசிரியர் மற்றும் துறைத்தலைவராகப் பணியாற்றி வருகிறார்.

31 வருடம் பணியனுபவமுடைய இவர் கன்னட மொழிக்கான முதுகலை மற்றும் முனைவர் பட்ட மாணவர்களுக்கு நெறியாளராகவும் இருந்து வருகிறார். மொழிபெயர்ப்புப் பணியில் ஆர்வம் கொண்ட இவர், தேசீய, பன்னாட்டுக் கருத்தரங்குகளில் பங்கேற்று பல ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார். கோயம்புத்தூரில் 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற செம்மொழி மாநாட்டில் பங்கேற்று, கன்னடம் - தமிழ் மொழிபெயர்ப்பு குறித்த ஆய்வுக் கட்டுரையினை வாசித்துள்ளார். இக்கட்டுரை செம்மொழி மாநாட்டு ஆய்வு மலரிலும் இடம் பெற்றிருக்கிறது.

கடந்த 15 ஆண்டுகளாக மொழிபெயர்ப்புத் துறையில் செயல்பட்டு வரும் இவர், கன்னடம் மற்றும் தமிழ் மொழிகளுக்கிடையில் பாலமாகப் பணியாற்றி வருகிறார். தமிழ் இலக்கியத்திற்குப் பெருமை சேர்க்கும் சங்க இலக்கியத்தைக் கன்னட மொழிக்கு மொழி மாற்றம் செய்யும் குழுவில் ஒருவராகச் செயல்பட்டு வருகிறார். இவரின் மொழிபெயர்ப்புகள் வெளிநாட்டு பத்திரிகைகளிலும் வெளியாகியுள்ளன. தமிழ் மொழியில் கணையாழி, திணை, புதுப்புனல், திசைஎட்டும், புதுகைத் தென்றல், கல்வெட்டு, இனிய நந்தவனம், வல்மபுரி-இலங்கை, கிழக்கு வாசல், வளரி, காற்றுவெளி, ஹெர் ஸ்டோரீஸ் (HER STORIES), முத்துக்கமலம், மக்கள் மனம்- சிங்கப்பூர், வைரமாலை, குரல் ஒலி, அவள் விகடன் இதழ்களில் இவரது கன்னட மொழியிலிருந்து தமிழ் மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. கன்னட மொழியில் சுதா, தரங்கா, ஹொஸது, சம்ருத்தி- ஹெப்பாள கன்னட சாஹித்திய பரிஷத்து, சங்க்ரமணா, ஷுபஜ்யோதி, சன்சய, சமாஜமுகி, சங்காதா, லோசனா- பி. எம். ஷ்ரீ ப்ரதிஷ்டான, கன்னட அத்யயன, த்ருஷ்யா - பெளகு, மஹிளா லோகா, குவெம்பு பாஷா பாரதி, அனிகேதன, கன்னட நாளிதழ்கள், ப்ரஜாஸ்த்ரா, அவதி, கெண்டஸம்பிகெ. புக் ப்ரஹ்மா, டி. வி 9 கன்னட, கருநாடக மாநில நூலகம்- ஷதமாநத பெளகு, தண்டு எக்ஸ்பிரஸ், டைம்ஸ் ஆஃப் இண்டியா ஆகிய இதழ்களில் இவரது தமிழிலிருந்து கன்னடத்திற்கு மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.

தூர்தர்ஷன், எப்.எம்.ரேடியோ, வெப் ரேடியோ ஜெர்மனி, Book Brahma, Sirinaadu web T.V ஆகியவற்றில் இவரது நேர்காணல்கள் வெளியாகி இருக்கின்றன.

இவரின் மொழிபெயர்ப்பு இலக்கியங்கள்

1. வைரமுத்துரவர மூவத்துமூரு கவிதெகளு, கிறிஸ்துவ பல்கலைக்கழகம், 2009.

2. ஒன்பதாம் திருமுறை, தர்மபுரம் ஆதீனம் வெளியீடு, காந்தளகம், 2010.

3. தியான லிங்க குரு தந்த குரு, ஈஷா பவுண்டேஷன் வெளியீடு, 2011.

4.புதுமைப்பித்தன், சாகித்திய அகாதெமி வெளியீடு, 2014. (தமிழில் வல்லிக்கண்ணன் அவர்களின், ‘புதுமைப்பித்தன் வாழ்க்கை- இலக்கியம்- சாதனை’ குறித்த நூல்)

5. கன்னடக் கவிஞர் டாக்டர் சித்தலிங்கய்யா அவர்களின் கவிதைகளை "கவிஞர் சித்தலிங்கய்யா 40 கன்னடக் கவிதைகள்” என்னும் தலைப்பில், கவிஞர் மதுமிதாவுடன் இணைந்து தமிழாக்கம், புதுப்புனல் வெளியீடு, 2014.

6. அகிலன், ஞானபீட விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளரைக் குறித்த கன்னட நூல் வெளியீடு, ராஷ்ட்ரோத்தான பப்ளிகேஷன், பாரத பாரதி, 2015.

7. கவிஞர் வைரமுத்து அவர்களின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற ’கள்ளிக்காட்டு இதிகாசம்’ புத்தகத்தை கன்னடத்தில் "கள்ளி காடின இதிஹாச” என்னும் தலைப்பில் மொழிபெயர்ப்பு, கேந்திர சாகித்திய அகாதெமி வெளியீடு, 2021.

8. தமிழ் அறிஞரும் பேராசிரியருமான த. கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன் இணைந்து “நற்றிணை, குறிஞ்சிபாட்டு, பதிற்றுப்பத்து, பரிபாடல்” என்னும் தமிழில் புகழ்பெற்ற சங்க இலக்கிய நூல்களை கன்னட மொழிக்கு மொழி பெயர்த்துள்ளார், CICT பப்ளிகேஷன், சென்னை, 2021.

9. தமிழின் புகழ்பெற்ற கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ அவர்களின் ஐம்பதிற்கும் மேற்பட்ட கவிதைகளை கன்னடத்திற்கு மொழிபெயர்த்துள்ளார். ஹைக்கூ கவிதைகளை மலர்விழியின் மகள் திவ்யதர்ஷினி மொழிபெயர்த்துள்ளார். இந்தப் புத்தகம், வண்ணங்கள் பேசட்டும் ”பண்ணகளு மாதாடலி” என்னும் தலைப்பில் வெளிவந்துள்ளது. பஞ்சமி மீடியா பப்ளிகேஷன்ஸ் வெளியீடு, பெங்களூரு, 2021.

10. செம்மொழி மத்தியத் தமிழாய்வு மையத்திலிருந்து வழங்கப்பட்ட பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுக்கான மொழிபெயர்ப்பில் முனைவர் அ. சங்கரி அவர்களோடு இணைந்து செயல்பட்டு வருகிறார். தா. கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன் இணைந்து சிலப்பதிகாரம் மொழிபெயர்ப்பிலும் ஈடுபட்டு வருகிறார்.

விருதுகள்

1.”வைரமுத்துரவர மூவத்துமூரு கவிதெகளு” நூலிற்கு ‘திருச்சி நல்லி திசை எட்டும் விருது” (2011)

2. சங்க இலக்கிய மொழிபெயர்ப்பு, இன்றைய நவீன கவிதைகள், சிறுகதைகள் மொழிபெயர்ப்புப் பணிகளைப் பாராட்டி, கர்நாடக திராவிட முன்னேற்றக் கழகம், கர்நாடகாவின் திராவிடக் கட்சியினர் வழங்கிய 'குவெம்பு 2015’ விருது.

3. “கொரடீகெரயின் அன்னபூர்ணா பிரதிஷ்டானா” எனும் மொழிபெயர்ப்பு பணிகளுக்கு, சம்பூர்ண விருது (2017)

4. ‘கவிஞர் சித்தலிங்கய்யா 40 கன்னட கவிதைகள்' தமிழாக்கம் மற்றும் மொழிபெயர்ப்புப் பணிகளுக்கு, திருப்பூர் சக்தி விருது (2018)

5. ”சாகித்யா சேவா ரத்னா” பட்டம் (2018)

6. சென்னை, நந்தவனம் பவுன்டேசன்ஸ் வழங்கிய “உலகப் பெண் சாதனையாளர் விருது” (2019)

7. சென்னை, இலக்குவனார் இலக்கியப் பேரவை, சங்க இலக்கிய மொழி பெயர்ப்புக்காக வழங்கிய "இலக்குவனார் விருது” (2019)

8. பெங்களூரு கே. என் .குழுமம் வழங்கிய சிறந்த பேராசிரியருக்கான ”ஷ்ரவணிகா விருது” (2020)

9. அனைத்திந்திய தமிழ்ச் சங்கம் வழங்கிய ”தமிழ்த் தாரகை விருது” (2022)

10. கவிஞர் வைரமுத்துவின் ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ கன்னட மொழியாக்கமான ‘கள்ளிகாடின இதிஹாச’ எனும் நூலுக்கு, குவெம்பு பாஷா பாரதி விருது (2022)

ஆகிய விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

இத்தகைய சிறப்புடைய இவருக்கு தேனித் தமிழ்ச்சங்கமும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகமும் இணைந்து " சொற்சுவைத் தேனீ " எனும் விருதினை வழங்கிச் சிறப்பித்துள்ளது.

சொற்சுவைத் தேனீ விருது



தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து 9-7-2022 அன்று தேனி, வெஸ்டர்ன் காட்ஸ் ஓட்டலில் நடத்திய ‘இணைய வழி தமிழ் உரைகள் -150 நிறைவு விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா’வில் இவருக்கு, தமிழ்ப் பல்கலைக்கழக மாண்பமைத் துணைவேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன் அவர்களால் ‘சொற்சுவைத் தேனீ விருது' வழங்கிச் சிறப்பிக்கப்பெற்றது.


© 2018-2025 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ்

(www.muthukamalam.com)
(ISSN: 2454-1990)