முனைவர் ரெ. நல்லமுத்து
பன்னெடுங் காலத்திற்கு முன் சமணம் தழைத்தோங்கிய காலக்கட்டத்தில் ‘சிராப்பள்ளி’ என்று அழைக்கப்பட்டு, பின் சைவச் சமயத்தின் செல்வாக்கால் ‘திரு’என்னும் முன்னொட்டை அடையாகக் கொண்டு திருச்சிராப்பள்ளி என்று தற்போது அழைக்கப்பட்டு வரும் மாநகருக்குப் பெருமை சேர்க்கும் கல்வி நிறுவனங்களில் முதன்மையாகத் திகழ்வது ‘தூய வளனார் தன்னாட்சி கல்லூரி’ என்றால் அது மிகையில்லா பேரூண்மையாகும். இக் கல்லூரியின் தமிழ்த்துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிவரும் முனைவர் ரெ.நல்லமுத்து அவர்கள், கரூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள முருங்கப்பேட்டை என்னும் சிற்றூரில் பிறந்து, பள்ளிப் படிப்பை முடித்து, இளங்கலை தமிழ், முதுகலை தமிழ், ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்டம் என அனைத்துப் பட்டங்களையும் வளனார் கல்லூரியில் பெற்றார் என்பது பெருமைக்குரிய செய்தியாகும்.
கல்லூரியின் ஆசிரியர் பணியில் கற்பித்தல் என்னும் தன் பணியைச் சீரோடும் சிறப்போடும் ஆற்றிவருகின்ற அதே நேரத்தில் ஆய்வுப் பணிகளையும் தொடர்ந்து செய்து வருகின்றார் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். மாநில அளவில், தேசிய அளவில், பன்னாட்டு அளவில் நடைபெறும் கருத்தரங்குகளுக்குக் கட்டுரை எழுதி அனுப்புவதைத் தன் கடமையாகக் கொண்டுள்ளார். 2014ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற பன்னாட்டு இதழியல் கருத்தரங்கிற்கு, தன் சொந்தப் பணத்தில் பயணம் செய்து கட்டுரையை நேரில் வழங்கினார். இவருடைய கட்டுரையின் கருத்து வளத்தைப் பாராட்டு, மலேசியா நாட்டுக் கல்வி அமைச்சர் “சி.பா.ஆதித்தனார் இதழியல் விருது” வழங்கிச் சிறப்பித்தார் என்பது இவரின் வாழ்க்கை வரலாற்றிற்கு இச் செய்தி மகுடம் சேர்க்கும்.
2016ஆம் ஆண்டு, தமிழ் இலக்கியம் மற்றும் மருந்தியல் மேற்கோள்களின் அடிப்படையில் சித்த மருத்துவத் தரவு தள உருவாக்கம் என்னும் ஆய்வுத் திட்டத்திற்கு, பல்கலைக்கழக மானியக் குழுவின் பெருந்திட்ட ஆய்வுக்கான நிதி நல்கை கிடைக்கப் பெற்றது. திட்ட அறிக்கையில் வேண்டப்பட்ட தொகை ரூ.5 இலட்சம் ஆகும். ஆனால், திட்டத்தின் சிறப்பும், நோய் நீக்கும் மருத்துவ மூலிகைகளின் சிறப்பினைக் கண்டறிதல் போன்ற சிறப்பிற்காக மானியக் குழு அனுமதித்த தொகை ரு.11 இலட்சமாகும். இது முனைவர் ரெ.நல்லமுத்து அவர்களின் ஆய்வுத் திறனுக்குக் கிடைத்த தக்க சான்றாகும்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ஆய்வு உதவியாளருடன், பெருந்திட்ட ஆய்வு முதன்மையர் முனைவர் ரெ.நல்லமுத்து அவர்கள் களப்பணி மேற்கொண்டு, ஆயிரக்கணக்கான மூலிகைகளைக் கண்டறிந்துள்ளார். அதில் அன்றாட வாழ்வுக்குப் பயன்படும் நோக்கில் 250 மூலிகைகள் மட்டும் இனம் காணப்பட்டு அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன. மூலிகைகளின் எந்ததெந்த பாகங்கள் பயனுடையவையாக உள்ளன என்பது கண்டறியப்பட்டுள்ளன. மூலிகையின் மலர், காய், கனி, பிசின், பட்டை, வேர், இலை போன்றவை மருத்துவ பயன் உடையது என்பது மூலிகைகளின் பெயர் வரிசைப்படி அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன. (எ-டு) கசாகசா செடியிலிருந்து எடுக்கப்படும் ஒப்பியம் என்னும் மருத்து பொருள் வயிற்று கடுப்பைப் போக்கும் குணம் உள்ளது என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. மூலிகைகளைச் சித்தர் எப்படி கண்டறிந்து மருந்தாக எவ்வாறு தயாரித்தார்கள் என்பதும் விளக்கப்பட்டுள்ளன. மூலிகைகளின் காய், கனி போன்ற பல்வேறு பாகங்களைச் சாப்பிட்டு, உடல் திறனுடன் அந்த காலத்து மக்கள் வாழ்ந்துள்ளார்கள் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. சித்த மருத்துவம் தொடர்பான நூல்களின் பட்டியல் இந்த ஆய்வின் பின்னிணைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது. 250 மூலிகைகளின் பெயர்கள் அகர வரிசையில் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.
மூலிகைகளின் பெயர்கள் பிறமொழிகளில் உள்ளமையும் சுட்டப்படுள்ளது. (எ-டு) ஆடா தொடா மூலிகையின் பெயர் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி முதலிய மொழிகளின் எவ்வாறு அழைக்கப்படுகின்றது என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருமலுக்கு, சீழ் பிடித்திருந்தால் ஆடா தொடா இலை பயன்படுத்தப்படுகின்றது. சங்க இலக்கியங்களில் இந்த மூலிகைப் பற்றிய குறிப்பு இருப்பின் அது குறித்த தகவல்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன. தமிழ் இலக்கியங்களில் இந்த மூலிகைகள் குறித்த தகவல்களும் தரப்பட்டுள்ளன. மொத்தத்தில் தமிழ் இலக்கியங்களில் காணப்படும் மூலிகைகளின் மருத்துவப் பயன்கள் விரிவாக இந்நூலின் வழியாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. உடல் நோய் நீக்கும் சித்தமருத்துவம் தொடர்பான ஒரு நூல் தமிழ் ஆய்வுலகிலிருந்து வெளிவருவது சிறப்பான ஒன்றாகும்.
இதுவரை நான்கு நூல்களும், 70க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளும் வழங்கியுள்ளார்.
இத்தகைய சிறப்புடைய இவருக்கு தேனித் தமிழ்ச்சங்கமும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகமும் இணைந்து " சொற்சுவைத் தேனீ " எனும் விருதினை வழங்கிச் சிறப்பித்துள்ளது.
சொற்சுவைத் தேனீ விருது


தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து 9-7-2022 அன்று தேனி, வெஸ்டர்ன் காட்ஸ் ஓட்டலில் நடத்திய ‘இணைய வழி தமிழ் உரைகள் -150 நிறைவு விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா’வில் இவருக்கு, தமிழ்ப் பல்கலைக்கழக மாண்பமைத் துணைவேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன் அவர்களால் ‘சொற்சுவைத் தேனீ விருது' வழங்கிச் சிறப்பிக்கப்பெற்றது.