TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - தேனீ விருதாளர்கள்

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

சொற்சுவைத் தேனீ விருதாளர்


திருநங்கை பத்மினி பிரகாஷ்

உலகின் முதல் திருநங்கை செய்திவாசிப்பாளர், தமிழகத்தின் முதல் திருநங்கை தமிழ்த்துறையின் உதவிப்பேராசிரியர், பரதநாட்டியக் கலைஞர், கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தமிழகக் காவல்துறையினருக்கு அட்வகஸி பயிற்சியாளர் (TOT), தொலைக்காட்சி நடிகை, அழகிப் போட்டிகளில் மிஸ்.தமிழ்நாடு, மிஸ்.இந்தியா பட்டம் பெற்றவர், சமுதாயப் போராளி, தற்போது கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இத்தகைய பன்முகத் திறமைகள் கொண்ட திருநங்கை. பத்மினி பிரகாஷ் அவர்களுக்கு, பொதிகைத் தொலைக்காட்சியில் கலைத்துறையைச் சார்ந்த பல கலைஞர்களை நேர்காணல்கள் செய்த ஊடகவியலாளரும் கூட.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் பிறந்த இவர், வழக்கமாகத் திருநங்கையர் சந்திக்கும் கேலி, கிண்டல், அவமானங்களுக்கு உள்ளானவர்தான். ஆனால், அப்படிப்பட்ட நிகழ்வுகளைக் கண்டு, பயந்து முடங்காமல், ஓடி ஒளியாமல், கேலி செய்தவர்களே, உயர்வாகப் பேசும்படி செய்வதையே இலட்சியமாகக் கொண்டார். வளரிளம் பருவத்தில் தன்னைத் திருநங்கையாக உணர்ந்து கொண்ட பின்னர், தான் சிறு வயது முதல் பட்ட அவலங்களை “நெருப்பாற்றில் நீந்தி வந்தேன்” என்ற தன் வரலாற்று நூலாக எழுதி வெளியிட்டுள்ளார். இந்நூல், இக்காலத் திருநங்கையர்களுக்கு ஒரு பாடமாக இருப்பதோடு மட்டுமின்றி பொது மக்களுக்கும் திருநங்கையர் பற்றிய புதிய பார்வையைத் தருவதாக அமைந்திருக்கிறது.

* 2007ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற திருநங்கையர்களுக்கான அழகிப் போட்டியில் “அழகுராணி” என்ற பட்டம் பெற்றார்.

* 2009 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற அழகிப்போட்டியில் “மிஸ் இந்தியா” பட்டம் பெற்று திருநங்கையருக்குப் பெருமை சேர்த்தார்.

* 2008 ஆம் ஆண்டு நடிகை குஷ்பு அவர்களுடன் தனியார் தொலைக்காட்சியில் ருத்ரா எனும் தொடரில் நடித்தார். மதுபானக்கடை என்னும் திரைப்படத்தில் திருநங்கையருக்கான அச்சு அசல் கதாபாத்திரம் ஏற்று நடித்தார்.

* 2010 ஆம் ஆண்டு தற்போதைய தமிழ்நாடு காவல்துறை சட்டம் ஒழுங்குப் பிரிவின் தலைமை இயக்குநர், முனைவர். திரு . சைலேந்திர பாபு அவர்களின் மேற்பார்வையில் தமிழகக் காவல்துறையினருக்கு ஹெச். ஐ. வி நோய்த் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் திருநங்கையர் பற்றிய புரிதல் வகுப்புப் பயிற்சியாளராகப் பயிற்சியளித்தார்.

* 2014 ஆம் ஆண்டு “ மூன்றாம் பாலினம் “ என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு தமிழ் மீது கொண்ட பற்றால் செய்திவாசிப்பாளராகி உலகின் முதல் திருநங்கை செய்திவாசிப்பாளர் என்ற நட்சத்திர நிலையினைப் பெற்றார். அவ்வாறு, பணிபுரிந்து கொண்டே பாரதியார் பல்கலைக் கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் முதுகலைத் தமிழ் இலக்கியம் பயின்றார்.

* 2015 ஆம் ஆண்டு திருநங்கை. பத்மினி பிரகாஷ் அவர்களின் செய்தி வாசிப்பைக் கண்டு பெருமையடைந்த அன்றைய கர்நாடக முதலமைச்சர் திரு. சித்தராமையா அவர்கள் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி வெகுவாகப் பாராட்டினார்.

* 2016 – ஆம் ஆண்டு ஆந்திராவில் ஸ்ரீ தியாகராஜ சங்கீத சபாவில் நடைபெற்ற பத்மினி பிரகாஷ் அவர்களின் பரதநாட்டியக் கலை நிகழ்ச்சியைப் பாராட்டி பழம்பெரும் இயக்குநர் திரு. கே. விஸ்வநாத் அவர்கள் தங்க மோதிரத்தைப் பரிசளித்தார்.

* சாலமன் பாப்பையா முதல் பல மேடைப் பேச்சாளர்களின் பட்டிமன்றங்களில் பட்டிமன்றப் பேச்சாளராகவும், தமிழகமெங்கும் பல கல்லூரிகளில் தன்னம்பிக்கைப் பேச்சாளராகவும்பங்கு பெற்று வருகிறார்.

எந்த மாறுபட்டச் சிந்தனைக்கும் இடம் கொடுக்காது, முன்னேற்றம் ஒன்றையேத் தனது சிந்தனையில் கொண்டார். இல்லறம் அல்லாதது நல்லறம் அல்ல என்ற ஒளவையின் வாக்கிற்கிணங்க, பிரகாஷ் என்பவரைத் திருமணம் புரிந்து, ஒரு குழந்தையினைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இவர் வாழ்க்கையில் சந்தித்த சோதனைகள் அனைத்தையும் சாதனைகளாக்கி திருநங்கையர் சமூகத்திற்கே முன்னோடியாக விளங்கி வருகிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இவருக்கு, அக்கினிச் சிறகுகள் விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது, சக்தி சாதனா விருது, அறம் விருது, சாதனைப் பெண் விருது, தங்கக் கைகள் விருது, கோவையின் சிறந்த பெண்மணி விருது போன்ற எண்ணற்ற விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

இத்தகைய சிறப்புடைய இவருக்கு தேனித் தமிழ்ச்சங்கமும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகமும் இணைந்து " சொற்சுவைத் தேனீ " எனும் விருதினை வழங்கிச் சிறப்பித்துள்ளது.

சொற்சுவைத் தேனீ விருது



தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து 9-7-2022 அன்று தேனி, வெஸ்டர்ன் காட்ஸ் ஓட்டலில் நடத்திய ‘இணைய வழி தமிழ் உரைகள் -150 நிறைவு விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா’வில் இவருக்கு, தமிழ்ப் பல்கலைக்கழக மாண்பமைத் துணைவேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன் அவர்களால் ‘சொற்சுவைத் தேனீ விருது' வழங்கிச் சிறப்பிக்கப்பெற்றது.


© 2018-2025 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ்

(www.muthukamalam.com)
(ISSN: 2454-1990)