திரு யாழ்பாவாணன்
இலங்கையின் வடக்கில் யாழ்ப்பாணம் அருகேயிருக்கும் மாதகல் கிழக்கை வாழ்விடமாகக் கொண்ட காசிராசலிங்கம் ஜீவலிங்கம் (காசி.ஜீவலிங்கம்) அவர்கள் 1969 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் நாளன்று பிறந்தவர். 'யாழ்பாவாணன்' என்ற புனைப்பெயரில் பல்வேறு ஊடகங்களில் எழுதியும் பேசியும் வருகிறார். இலங்கை அரசுப் பாடத்திட்டத்தில் 12ஆம் வகுப்பு வரை படித்த இவர், NCCA, SLCDL, NEICT எனும் இலங்கை அரசின் கணினித் தேர்வுகளில் தேர்ச்சியடைந்திருக்கிறார். மேலும், தனியார் அமைப்புகளின் வழியாக நடத்தப்பெற்ற இதழியல், உளவியல் (வழிகாட்டலும் மதியுரையும்) தேர்வுகளிலும் தேர்ச்சியடைந்திருக்கிறார். மருத்துவமனை முகாமைத்துவம் குறித்தும் படித்திருக்கிறார்.
பள்ளியில் 5 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான கணித ஆசிரியராக 7 ஆண்டுகள் பணியாற்றிய இவர், பின்னர் கணினிப் பாட விரிவுரையாளர், கணினி நிகழ்நிரலாக்குனர் ஆகவும் பணியாற்றினார். பின்னர் பத்திரிகை ஒன்றில் செய்தியாளர், மாணவருக்கான ஆலோசகர் எனவும் பணியாற்றியிருக்கிறார். தற்போது தனியார் மருத்துவமனை ஒன்றில் முகாமையாளராகப் பணியாற்றி வருகிறார். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் சுய முன்னேற்ற வழிகள் (Ways of Self Improvement) எனும் தலைப்பிலான தொடர் நிகழ்வில் நாள்தோறும் ஒரு தலைப்பில் சுயமுன்னேற்றம் தொடர்பான ஐந்து நிமிட உரையினை வழங்கி வருகிறார்.
1990 ஆம் ஆண்டில், யாழ் ஈழநாதம் பத்திரிகையில் “உலகமே ஒரு கணம் சிலிர்த்தது” என்ற இவரது முதல் கவிதை வெளியானதைத் தொடர்ந்து இலங்கையின் முன்னணி தமிழ்ப் பத்திரிகையான வீரகேசரி உள்ளிட்ட பல்வேறு பத்திரிகைகளிலும் இவரது கவிதைகள் வெளியாகி இருக்கின்றன. 2010 ஆம் ஆண்டிலிருந்து பல்வேறு தமிழ் வலைத்தளங்களிலும் இவரது பதிவுகள் இடம் பெற்று வருகின்றன. தமிழ் வலைத்தளங்களில் நற்றமிழைப் பேணுமாறு குரல் கொடுத்தும் வருகிறார். இலக்கியத்தில் கவிதைகள், பாடல்கள், கதைகள், கட்டுரைகள், நகைச்சுவைகள், நாடகஉரையாடல்கள் எனப் பல துறைகளிலும் எழுதி வருகிறார்.
இவரது ‘யாழ்பாவாணன் வெளியீட்டகம்’ ஊடாகப் பல மின்நூல்களை வெளியிட்ட இவர், 2020 ஆம் ஆண்டில் ‘யாழ்பாவாணன் கவிதைகள்’ என்ற இவரது கவிதை நூலை அச்சிலும் வெளியிட்டிருக்கிறார். கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் தொடர்ந்து, ‘யாழ்பாவாணன் கலைப்பணி மன்றம்’ எனும் மின்குழுமம் ஒன்றினைத் தொடங்கி, பல்வேறு செயலிகள் வழியாக இலக்கியப் பயிலரங்குகளையும் நடத்தி வருகிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இத்தகைய சிறப்புடைய இவருக்கு தேனித் தமிழ்ச்சங்கமும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகமும் இணைந்து " சொற்சுவைத் தேனீ " எனும் விருதினை வழங்கிச் சிறப்பித்துள்ளது.

தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து 9-7-2022 அன்று தேனி, வெஸ்டர்ன் காட்ஸ் ஓட்டலில் நடத்திய ‘இணைய வழி தமிழ் உரைகள் -150 நிறைவு விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா’வில் இந்தியாவிலிருக்கும் விருதாளர்களுக்கு, தமிழ்ப் பல்கலைக்கழக மாண்பமைத் துணைவேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன் அவர்களால் ‘சொற்சுவைத் தேனீ விருது' வழங்கிச் சிறப்பிக்கப் பெற்றது.
வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் இவ்விழாவில் பங்கேற்க இயலாது என்பதால், மின்னஞ்சல் வழியாக விருதுச் சான்றிதழ் அனுப்பி வைக்கப்பட்டது.