TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - பாராட்டிச் சிறப்பு செய்யப் பெற்றவர்கள்

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

தமிழ்ச்சேவைத் தேனீ விருதாளர்


பழ. பாஸ்கரன்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகில் தளக்காவூர் என்னும் கிராமத்தில் பழனி - அமுதவள்ளி இணையருக்கு 1990 ஆண்டு மகனாகப் பிறந்தவர். கணினி அறிவியலில் முதுகலை மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றவர். பள்ளியில் பயிலும் காலத்திலிருந்தே மேடைப் பேச்சின் மேல் ஆர்வம் கொண்டு பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளைப் பெற்றவர்.

தமிழ் இலக்கியச் சொற்பொழிவு, ஆன்மிகச் சொற்பொழிவு, பட்டிமன்றம், வழக்காடு மன்றம் என்று பல்வேறு மேடைகளில் தொடர்ந்து பங்கேற்று வருபவர். இயல், இசை, நாடகம் என மூன்று துறைகளிலும் ஈடுபாடு கொண்டு கலைகளை நேசிக்கும் இவர், இந்து சமயக் கோயில்களில் தமிழ் முறையிலான வழிபாட்டிலும் ஆர்வம் கொண்டவர். தமிழ் வழிபாட்டு முறைக்கான சிறப்புக் கல்வியைக் கற்றுத் தேர்ச்சியடைந்து, அதற்கான சிவாச்சாரியார் பட்டமும் பெற்றவர். தமிழ்மொழியின் முக்கியத்தை வலியுறுத்தி, தமிழ் மரபு வழியிலான திருமணத்தை நடத்தி வைக்கும் பணியினையும் செய்து வருகிறார்.

பல்வேறு தமிழ்நாடு அரசு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய பெருமைக்குரியவர். தமிழ்நாடு முதல் அமைச்சர் கலந்து கொண்ட சில நிகழ்வுகளைத் திறம்பட நடத்தி, தமிழ்நாடு அரசின் உயர் அலுவலர்களின் பாராட்டைப் பெற்றவர். பல்வேறு இலக்கிய அமைப்புகள் இவரது தமிழ்ப் பணியைப் பாராட்டி விருதுகள் அளித்து சிறப்பித்திருக்கின்றன. அவற்றுள், 2012 ஆண்டு சென்னை கம்பன் கழகத்தின் சிறந்த பேச்சாளருக்கான கம்பனடிப்பொடி விருது, இளந்தமிழர் இலக்கியப் பட்டறையின் தமிழொளி விருது, காரைக்குடி அழகப்பா இசைப்பள்ளியின் சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் விருது போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

இவருக்குத் தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து “தமிழ்ச்சேவைத் தேனீ” எனும் விருதினை வழங்கிச் சிறப்பித்திருக்கிறது.

தமிழ்ச்சேவைத் தேனீ விருது



தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து 9-7-2022 அன்று தேனி, வெஸ்டர்ன் காட்ஸ் ஓட்டலில் நடத்திய ‘இணைய வழி தமிழ் உரைகள் -150 நிறைவு விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா’வில் இவருக்கு, தமிழ்ப் பல்கலைக்கழக மாண்பமைத் துணைவேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன் அவர்களால் ‘தமிழ்ச்சேவைத் தேனீ விருது' வழங்கிச் சிறப்பிக்கப்பெற்றது.


© 2018-2022 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (www.muthukamalam.com)

(ISSN: 2454-1990)