TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - பாராட்டிச் சிறப்பு செய்யப் பெற்றவர்கள்

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

தமிழ்ச்சேவைத் தேனீ விருதாளர்


முனைவர் மா. சிதம்பரம்

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரைச் சார்ந்த தென்மாநகரில் சித.மாணிக்கம் - மா.ஜெயலெட்சுமி இணையர்களுக்கு 1975 ஆம் ஆண்டு, ஜூலை 31 அன்று மகனாகப் பிறந்தவர் முனைவர் மா. சிதம்பரம். சு. மகேஸ்வரி என்பாரை வாழ்க்கைத்துணையாகவும், சி. அருண்கிர்த்திக் என்பாரை மகனாகவும் கொண்டவர். எம்.ஏ., பி. எட்., எம்.பில்., பி.எச்டி., பட்டங்களைப் பெற்ற இவர், தனது பள்ளிப்படிப்பைத் திருப்புத்தூரிலும், கல்லூரிக் கல்வியை மேலச்சிவல்புரி கணேசர் செந்தமிழ்க் கல்லூரியிலும், பி. எட் கல்வியைப் புதுக்கோட்டை அரசு கல்வியியல் கல்லூரியிலும் பயின்றவர். தனது கல்லூரிப் படிப்பான முதுகலையில் பாரதிதாசன் பல்கலைக்கழக முதல் தர மாணவராய்த் தேர்ச்சி பெற்று, அதற்கான தங்கப் பதக்கத்தினை அன்றைய தமிழக ஆளுநரான மேன்மைமிகு பாத்திமாபீவி அவர்களிடம் இருந்து பெற்றவர். அழகப்பா பல்கலைக்கழகத்தில் பன்னிரு திருமுறைகளில் அகப்பொருள் மரபுகள் என்னும் தலைப்பில் முனைவர் பட்டத்தினை முனைவர் சு. இராசாராம் அவர்களின் நெறியாளுகையின் கீழ் மிகுதர மதிப்பீட்டுடன் பெற்றவர். தற்பொழுது காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் தமிழ் இணைப்பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். ஓலைச்சுவடியியல், கல்வெட்டியல் தொடர்பான பயிலரங்குகளில் பயிற்சி பெற்றவர். முனைவர் பட்ட நெறியாளர். மேன்மைமிகு தமிழக ஆளுநர் அவர்களால் ஆளுநர் அவர்களின் சார்பு உறுப்பினராக அழகப்பா பல்கலைக்கழகத்தின் செனட் சபைக்கு ( 2018 - 2021 ) நியமிக்கப் பெற்றவர்.

தமிழில் வெளிவரும் பல்வேறு நாளிதழ்களிலும், ஆன்மிகம் தொடர்பான இதழ்களிலும் கட்டுரைகளைத் தொடராக எழுதி வருபவர். இலக்கணம், இலக்கியம், சமயம் தொடர்பான எழுத்தும் பதிப்புமாக இவரது இருபத்தேழு நூல்கள் வெளியாகி இருக்கின்றன. இவரால் எழுதப்பெற்ற ஒன்பது நூல்கள் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி மாணவர்களுக்குப் பாடநூல்களாக உள்ளன. முனைவர் பட்ட நெறியாளராகப் பல்வேறு முனைவர் பட்ட மாணவர்களை உருவாக்கி வரும் இவர், அழகப்பா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளின் பாடத்திட்டக்குழு உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார்.

பெரியபுராணம், கந்தபுராணம், மகாபாரதம், பாகவதம், கம்பராமாயணம் போன்றவற்றைத் தொடராகப் பேசிவரும் ஆன்மிகத் தொடர் சொற்பொழிவாளர். தமிழகத் தொலைக்காட்சி, வானொலி போன்றவற்றில் சமய, இலக்கிய, சிந்தனை உரைகளை ஆற்றி வருபவர். பட்டிமண்டபப் பேச்சாளராய், நடுவராய் இரண்டாயிரம் மேடைகளுக்கு மேல் பங்கேற்று வருபவர். இலங்கை, மலேசியா, தென் ஆப்பிரிக்கா, ஜாம்பியா, துபாய், எத்தியோப்பியா போன்ற நாடுகளுக்கு இலக்கிய ஆன்மிகச் சொற்பொழிவுகளுக்காகச் சென்று வந்தவர். தவத்திரு குன்றக்குடி அடிகளார், பேராசிரியர் பெரும்புலவர் பா. நமசிவாயம், முனைவர் சாலமன் பாப்பையா, செல்வேந்தர் சுகிசிவம், கலைமாமணி கு. ஞானசம்பந்தம், தமிழ்கடல் நெல்லைக் கண்ணன், இலக்கியச்சுடர் த. இராமலிங்கம், பேராசிரியர் கணசிற்சபேசன், திரு. மதுக்கூர் இராமலிங்கம்., நாஞ்சில் சம்பத் போன்ற பல்வேறு இலக்கிய ஆளுமைகளின் கீழ் பட்டிமண்டபங்கள், விவாத அரங்கங்கள் போன்றவற்றில் பங்கெடுத்தவர், பங்குபெற்று வருபவர்.

தமிழக முதலமைச்சர் அறக்கட்டளைப் பரிசு, தியாகராசர் நினைவு அறக்கட்டளைப் பரிசு, சோம சுந்தரம் பிள்ளை வெள்ளிப் பதக்கம், டாக்டர் ரே. முத்துக் கணேசனார் மணிவிழா நினைவுப் பரிசு போன்றவற்றையும் பெற்றவர். சென்னை கம்பன் கழகம் நடத்திய திருக்குறள், சிலப்பதிகாரம், சீறாப்புராணம், பெரியபுராணம், கம்பராமாயணம், சீவக சிந்தாமணி போன்ற இலக்கியப் போட்டிகளில் முதற்பரிசுகளையும் வெள்ளி சுழற்கோப்பைகளையும் பெற்றவர்.தமிழகத்தின் பல்வேறு இலக்கிய அமைப்புகள் நடத்திய கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் எண்ணற்ற முதற்பரிசுகளைப் பெற்றவர். தேசிய பன்னாட்டுக் கருத்தரங்குகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளைப் படைத்தளித்தும் பங்கேற்றும் வருபவர். இலங்கை கொழும்பு தமிழ்ச்சங்கம், மலேசியா பல்கலைக்கழகம் போன்றவற்றுடன் இணைந்து இலங்கை, மலேசியா நாடுகளில் பன்னாட்டுக் கருத்தரங்கத்தினை ஒருங்கிணைப்பாளராக இருந்து நடத்தியவர். இதுவரை எட்டு பன்னாட்டுக் கருத்தரங்குகளின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டவர். தமிழ்நாடு அரசின் தமிழ்வளர்ச்சித்துறையால் நடத்தப்பெற்ற கருத்தரங்குகள், இணையத்தமிழ் கருத்தரங்குகள், அழகப்பா பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டுத் தமிழ் கருத்தரங்குகள் போன்றவற்றில் பயிற்றுனராகப் பணியாற்றி வருபவர்.

திருத்தொண்டர், சொற்சிலம்பர், மாத்தமிழ் சொற்கொண்டல், கம்பன் காவலர், கம்பர் மாமணி, பூவைராஜன் விருது, தமிழ்ச் செம்மல், தமிழ்ச்சுடர் போன்ற விருதுகளைப் பெற்றவர். திருப்புத்தூர் திருநெறித் திருமன்றத்தின் தலைவர். காரைக்குடி கம்பன் கழகத்தின் இணைச்செயலர். காரைக்குடி தமிழ்ச்சங்கத்தின் உறுப்பினர். உலக நாடுகளில் இருந்து தமிழ் படிக்கும் மாணவர்களுக்கு ஆசிரியராக இலக்கண, இலக்கிய வகுப்புகளை நடத்தி வருபவர். MAGIZHAM எனும் வலையொளி (youtube) சேனலை நடத்தி வருபவர்.

இவருக்குத் தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து “தமிழ்ச்சேவைத் தேனீ” எனும் விருதினை வழங்கிச் சிறப்பித்திருக்கிறது.

தமிழ்ச்சேவைத் தேனீ விருது



தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து 9-7-2022 அன்று தேனி, வெஸ்டர்ன் காட்ஸ் ஓட்டலில் நடத்திய ‘இணைய வழி தமிழ் உரைகள் -150 நிறைவு விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா’வில் இவருக்கு, தமிழ்ப் பல்கலைக்கழக மாண்பமைத் துணைவேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன் அவர்களால் ‘தமிழ்ச்சேவைத் தேனீ விருது' வழங்கிச் சிறப்பிக்கப்பெற்றது.


© 2018-2022 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (www.muthukamalam.com)

(ISSN: 2454-1990)