TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - பாராட்டிச் சிறப்பு செய்யப் பெற்றவர்கள்

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

தமிழ்ச்சேவைத் தேனீ விருதாளர்


கோ. மணி

சென்னையில் கோவிந்தராஜ் - லட்சுமி இணையருக்கு 1992 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 3 ஆம் நாளில் மகனாய்ப் பிறந்தவர் கோ. மணி. சென்னை, விவேகானந்தா கல்லூரியில் இளங்கலை வணிகவியல், நந்தனம் அரசு கலைக்கல்லூரியில் முதுநிலை வணிகவியல் முடித்து, மேடவாக்கம் காயிதே மில்லத் கல்லூரியில் வணிகவியலில் ஆய்வியல் நிறைஞர் பட்டமும், ஜெயலட்சுமி நாராயணசாமி கல்வியியல் கல்லூரியில் பி.எட்., பட்டமும் அவர் லேடி கல்வியியல் கல்லூரியில் எம்.எட்., பட்டமும் பெற்று, சென்னையிலுள்ள ஸ்ரீ சேஷாத்ரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் துணை முதல்வராகப் பணியாற்றி வருகிறார். சென்னை, ரெயின்போ பண்பலை வானொலியில் பகுதிநேர அறிவிப்பாளராகவும், தமிழ்த் தொலைக்காட்சிகளில் சிறப்பு நிகழ்வுகளின் நேரடி வர்ணனையாளராகவும் கூடுதல் பணிகளையும் செய்து வருகிறார்.

“நாநலம் என்னும் நலன்உடைமை அந்நலம் யாநலத்து உள்ளதூஉம் அன்று”

என்று பொய்யில் புலவரால் போற்றப்பட்ட சொல்வன்மை என்னும் அரிய செல்வத்தைப் பெற்ற இவர், கேட்டவர் பிணிக்கும் வகையிலும், கேளாரும் கேட்க விழையும் வகையிலும் சொல்லாடக் கூடிய வல்லமையுடையவர்.

இவர் பள்ளிக் காலத்திலிருந்து இது வரை கலந்து கொண்ட போட்டிகள் 702. இப்போட்டிகளில் முதல் பரிசு 190, இரண்டாம் பரிசு 152, மூன்றாம் பரிசு உள்ளிட்ட பிற பரிசுகள் 200க்கும் மேல் என்று தான் பங்கேற்ற போட்டிகளில் பரிசுகளை வாங்கிக் குவித்தவர். மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடம் பொற்பதக்கம் பெற்ற பெருமைக்குரியவர். தமிழக அளவில் நடைபெற்ற காந்தி பிறந்த தினப் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்று 5 முறை மேதகு தமிழக ஆளுநரிடம் பரிசு பெற்ற பெருமையுடையவர். தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை நடத்திய பேச்சுப் போட்டிகளில் 3 முறை மண்டல அளவில் வெற்றி பெற்று, ஒவ்வொரு முறையும் ரூ.10,000/- (பத்தாயிரம்) ரொக்கப் பரிசாகப் பெற்ற பெருமையும் இவருக்கு உண்டு.

உலகத் திருக்குறள் மையம், இவருக்கு ரூ. 5000/- (ரூபாய் ஐந்தாயிரம்) பரிசுத்தொகையுடன் ‘திருக்குறள் பேச்சாற்றல் செல்வர்’ எனும் விருதை அளித்துச் சிறப்பித்திருக்கிறது. தினந்தந்தி நாளிதழ் இவருக்கு ‘சொல்லருவி மணி’ எனும் விருதளித்து, தினத்தந்தி இளைஞர் மணி இதழின் அட்டையில் இவரது படத்தை முழுமையாக வெளியிட்டுச் சிறப்பித்திருக்கிறது. இவர் பயின்ற பள்ளிக்கூடம் வழங்கிய ‘தமிழ்க்கோ’ விருது, சென்னைக் கம்பன் கழகம், 2015 ஆம் ஆண்டு வழங்கிய சிறந்த மாணவப் பேச்சாளருக்கான கம்பன் அடிப்பொடி சா.கணேசனார் விருது, அரிமா சங்கங்களின் ‘நல்லாசிரியர்’ விருது, உறவுச்சுரங்கம் இலக்கிய அமைப்பு வழங்கிய ‘மதிஒளி’ விருது, மதுரையில் நடந்த வெல்லும் சொல் விழாவில், ‘இளம் சொல்லரசு’ விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் பெற்றிருக்கிறார்.

பிற்காலத்தில் மணி மணியாய்ப் பேசிப் பல்வேறு பரிசுகளை வாங்கிக் குவிக்கப் போகிறார் என்பதை முன்னரே அறிந்துதான், இவருக்குப் பெற்றோர், ‘மணி’ என்று பெயர் சூட்டியிருப்பார்களோ என்று வியக்கும் வண்ணம் இவர் பேச்சுக்காகப் பெற்ற பரிசுகளும், விருதுகளும், பாரட்டுகளும் ஏராளம். இவரது இணையரான திருமதி ரேகாமணி அவர்களும் இவருக்குச் சற்றும் குறைந்தவரல்ல. அவரும் இவருக்கு இணையாகப் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பரிசுகளையும், விருதுகளையும் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் இவரது இணையர் ரேகா மணியுடன் இணைந்து எழுதிய "மூன்றெழுத்தில் கம்பரின் முழு காப்பியம்" என்னும் நூல் தமிழ்நாடு அரசின் சிறந்த நூலுக்கான நிதி உதவி பெற்று வெளியிடப்பட்டது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.


தமிழ்ச்சேவைத் தேனீ விருது



தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து 9-7-2022 அன்று தேனி, வெஸ்டர்ன் காட்ஸ் ஓட்டலில் நடத்திய ‘இணைய வழி தமிழ் உரைகள் -150 நிறைவு விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா’வில் இவருக்கு, தமிழ்ப் பல்கலைக்கழக மாண்பமைத் துணைவேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன் அவர்களால் ‘தமிழ்ச்சேவைத் தேனீ விருது' வழங்கிச் சிறப்பிக்கப்பெற்றது.


© 2018-2022 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (www.muthukamalam.com)

(ISSN: 2454-1990)