TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - தேனீ விருதாளர்கள்

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

தமிழ்ச்சுவைத் தேனீ விருதாளர்


முனைவர் தெ. வாசுகி

நாகப்பட்டினம், அ. துரைசாமி நாடார் மரகதவல்லி அம்மாள் மகளிர் கல்லூரி (தன்னாட்சி)யில் தமிழ்த் துறைத்தலைவராகப் பணியாற்றி வரும் முனைவர் தெ. வாசுகி அவர்கள், தமிழில் முதுகலை, ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டங்களையும், கல்வியியலில் இளநிலைப் பட்டத்தையும், மகளிரியலில் முதுநிலைப் பட்டத்தையும் பெற்றிருக்கிறார். 30 வருடக் கல்விப் பணி அனுபவம் கொண்ட இவர், 13 நூல்களை எழுதி வெளியீட்டுள்ளார். 200 க்கும் மேற்பட்ட மாநில / தேசிய / பன்னாட்டுக் கருத்தரங்குகளில் கட்டுரைகளை வழங்கி உள்ளார். இதில் 100 க்கும் மேற்பட்டக் கட்டுரைகள், கருத்தரங்குகளின் நூல்கள், ஆய்வுக் கோவைகள், மலர்கள் மற்றும் இதழ்களில் இடம் பெற்றுள்ளன. திருக்குறள் தொடர்பாக இருபதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி, தேசிய / பன்னாட்டுக் கருத்தரங்குகளில் வழங்கியுள்ளார். 2010 ஆம் ஆண்டில் கோயம்புத்தூரில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கலந்து கொண்டு கட்டுரை வழங்கி உள்ளார். சிங்கப்பூர், மலேசியா, துபாய், அபுதாபி, சார்ஜா, அஜ்மல், இலங்கை போன்ற வெளிநாடுகளுக்குச் சென்று பன்னாட்டுக் கருத்தரங்குகளில் கலந்து கொண்டு கட்டுரைகளை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநில / தேசிய / பன்னாட்டு கருத்தரங்குகள் மற்றும் நிகழ்வுகள் என்று 22 நிகழ்வுகளுக்கு ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டிருக்கிறார். 2021 ஆம் ஆண்டில் தஞ்சாவூரில் நடைபெற்ற உலகத் திருக்குறள் மூன்றாவது மாநாட்டிற்கு ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டு, அதனைச் சிறப்பாக நடத்திக் காட்டிய பெருமையும் இவருக்குண்டு. கல்லூரியின் பாடத்திட்டக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினராகவும் உள்ள இவரது வழிகாட்டுதலில் ஏழு மாணவர்கள் முனைவர் பட்டங்களையும், பத்து மாணவர்கள் ஆய்வியல் நிறைஞர் பட்டங்களையும் பெற்றிருக்கின்றனர்.

பள்ளி / கல்லூரி / கோயில் / அமைப்புகள் நடத்திய நிகழ்வுகளில் 200-க்கும் அதிகமான உரைகளை வழங்கியுள்ளார். காரைக்கால் வானொலி நிலையத்தின் மூலம் 17 நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார். பாண்டிச்சேரித் தொலைக்காட்சி நிலையம் நடத்திய பாரதிதாசன் பிறந்தநாள் விழாச் சிறப்புப் பட்டிமன்ற நிகழ்வில் அணித்தலைவராகக் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார். இணைய வழியிலான பல நிகழ்வுகளில் பங்கேற்று உரையாற்றியுள்ளார். இந்நிகழ்வுகளில் சில வலையொளியில் (Youtube) பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், நாட்டு நலப்பணித்திட்டம், ரோட்ராக்ட் சங்கம், மகளிர் சங்கம், கிராமத் தத்தெடுப்புத் திட்டம் உள்ளிட்ட சமூகநலத் திட்டங்களில் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டு பல்வேறு சமூகத் தொண்டுகளைச் செய்துள்ளார். திருக்குறள் வாழ்நாள் உறுப்பினராகவும், திருவையாறு ஔவைக் கோட்டம் / தமிழ் ஐயா கல்விக் கழகம் என்ற தமிழ்த்தொண்டு அமைப்பில் 22 வருடங்களாக அமைச்சராகவும், இணை அமைச்சராகவும் செயல்பட்டு வருகிறார்.

திருக்குறள் செம்மல் விருது, அண்ணா விருது, செண்பகராமன் விருது, தமிழன்னை விருது, கவிமாமணி விருது, குறள் நெறிக் காவலர் விருது, ஔவை விருது, செந்தமிழ் திலகம் விருது, சிறந்த ஆசிரியர் விருது, ஆசிரியர் செம்மல் விருது, திருக்குறள் இறைநெறி விருது, வாணிதாசன் விருது, தமிழ்நாட்டு சாதனைப் பெண் விருது, செந்தமிழ் கோ விருது, தமிழ் மாமணி விருது, மங்கையர் திலகம் விருது, மங்கையர் மாமணி விருது, தமிழ் குன்றம் விருது என்று 55க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார்.

இத்தகைய சிறப்புடைய இவருக்கு தேனித் தமிழ்ச்சங்கமும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகமும் இணைந்து " தமிழ்ச்சுவைத் தேனீ " எனும் விருதினை வழங்கிச் சிறப்பித்துள்ளது.

தமிழ்ச்சுவைத் தேனீ விருது



தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து 9-7-2022 அன்று தேனி, வெஸ்டர்ன் காட்ஸ் ஓட்டலில் நடத்திய ‘இணைய வழி தமிழ் உரைகள் -150 நிறைவு விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா’வில் இவருக்கு, தமிழ்ப் பல்கலைக்கழக மாண்பமைத் துணைவேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன் அவர்களால் ‘தமிழ்ச்சுவைத் தேனீ விருது' வழங்கிச் சிறப்பிக்கப்பெற்றது.



© 2018-2024 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ்

(www.muthukamalam.com)
(ISSN: 2454-1990)