TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - இரத்த தானம்
http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

இரத்ததானம் (Blood Donation) குறித்த சில தகவல்கள்

இரத்ததானம் அல்லது குருதிக் கொடை (Blood Donation) என்பது ஒருவர் தனது இரத்தத்தைப் பிறருக்குப் பயன்படுத்திக் கொள்ளும் மனப்பான்மையுடன் தானமாக வழங்குவது. உடல் நலத்துடன் இருக்கும் ஒருவரின் உடலில் 5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது. இரத்த தானம் செய்பவர் உடலிலிருந்து ஒரு நேரத்தில் 300 மி.லி 300 மி.லி. இரத்தம் வரை எடுக்கப்படுகிறது. தானமாகக் கொடுக்கப்பட்ட இரத்தத்தின் அளவு இரண்டே வாரங்களில், நாம் உண்ணும் சாதாரண உணவிலேயே மீண்டும் உற்பத்தியாகிவிடும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை எந்தவிதப் பாதிப்புமின்றி இரத்ததானம் செய்யலாம். இரத்த தானம் செய்வதற்கு 5 முதல் 10 நிமிடங்கள் போதுமானது. இருப்பினும் இரத்ததானம் கொடுத்தவர்கள் 15 நிமிடங்கள் வரை சிறிது நேரம் ஓய்வெடுத்துச் செல்ல அறிவுறுத்தப்படுகிறது. இரத்த தானம் செய்வதால் உடலுக்குப் பாதிப்போ, பலவீனமோ ஏற்படச் சிறிதும் வாய்ப்பில்லை.

இரத்ததானத்தின் தேவைகள்

அறுவைச் சிகிச்சையின் போதும், விபத்தின் போதும் அல்லது ஏதாவது ஒரு வழியில் ஒருவருக்கு ஏற்படும் இரத்த இழப்பை ஈடு செய்து அவருடைய உயிரைக் காக்கும் பொருட்டு இரத்த தானம் தேவைப்படுகிறது. சிலர் தன்னார்வத்துடன் இரத்த தானம் செய்ய முன் வருகின்றனர். சிலர் சமூக சேவை அமைப்புகளின் வழிகாட்டுதலின் பேரில் இரத்த தானம் செய்து வருகின்றனர்.

* ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் தானமாகப் பெறப்படும் இரத்தத்தின் மொத்த தேவை சுமார் 4 கோடி யூனிட்கள் (1 யூனிட் இரத்தத்தின் அளவு 350 மில்லி லிட்டர் ஆகும்) எனும் அளவில் இருக்கிறது. ஆனால், தானமாகப் பெறப்படும் இரத்தத்தின் அளவு பத்தில் ஒரு பங்காகவே இருந்து வருகிறது.

* இரத்தம் மனிதனின் வாழ்கையில் மிகவும் உயரிய பரிசாகும். இரத்தத்திற்கு மாற்று எதுவும் இல்லை.

* ஒவ்வொரு இரண்டு விநாடிகளுக்கும் யாரோ ஒருவருக்கு ரத்தம் தேவைப்படுகிறது.

* ஒவ்வொரு நாளும் 38000 க்கும் அதிகமான இரத்த கொடையாளிகளின் தேவை இருக்கிறது.

* O எனப்படும் இரத்தப் பிரிவே அதிகம் தேவைப்படும் பிரிவாக இருக்கிறது.

* ஒவ்வொரு ஆண்டும் 1 மில்லியனுக்கும் அதிகமானவர்களுக்குப் புற்றுநோய் கண்டறியப்படுகிறது. இவர்களில் பலருக்கும் இரத்தம் தேவைப்படுகிறது.

* கீமோதெரபி சிகிச்சையின் போது தினமும் இரத்தம் தேவையானதாக இருக்கும்.

* விபத்துகளில் பாதிக்கப்படும் நபர்களுக்கு அதிக அளவில் இரத்தம் தேவையானதாக இருக்கிறது.

இரத்ததானம் செய்வதற்கான தகுதிகள்

* இரத்த தானம் செய்பவரின் வயது 18 வயது நிரம்பியவராகவும் 60 வயதிற்கு அதிகமில்லாமலும் இருத்தல் வேண்டும். சில நாடுகளில் 70 வயதுவரை இரத்ததானம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

* இரத்தத்தின் ஹிமோகுளோபின் அளவு ஆண்களுக்கு 13.5 முதல் 17.5 மி.கி./டெ.லி. அளவும், பெண்களுக்கு 12 முதல் 15.5 மி.கி/டெ.லி அளவும் இருக்க வேண்டும்.

* இரத்த தானம் செய்வபரின் எடை 50 கிலோவிற்குக் குறைவின்றியும் 160 கிலோவிற்கு அதிகமில்லாமலும் இருக்க வேண்டும்.

* ஆண், பெண் இருபாலரும் இரத்த தானம் செய்யத் தகுதியுடையவர்கள்.

* எந்த ஒரு தொற்று நோய் பாதிப்பு ஏற்படாதவராக இருக்க வேண்டும்.

* கடந்த ஓராண்டுக்குள் எந்தத் தடுப்பு மருந்தும் பயன்படுத்தி இருக்கக் கூடாது.

இரத்த தானம் அளிப்போர் அடையும் நன்மைகள்

* இரத்தப் பிரிவு, இரத்தத்தில் மஞ்சள் காமாலை, மலேரியா, பால்வினை நோய் மற்றும் எய்ட்ஸ் கிருமிகள் உள்ளதா என்று பரிசோதிக்கப்பட்டு இரத்த தானமளிப்பவர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.

* இரத்த தானம் செய்வது பிறர் நலன் காப்பதற்கு மட்டுமல்ல, தன் நலன் காப்பதற்கு மட்டுமல்ல, தன்நலன் மேம்படுவதற்கும் உதவும்.

* இரத்த தானம் செய்வது இயற்கையாகப் புதிய இரத்தம் உடலில் ஏற்றப்படுவதற்குச் சமம்.

* தற்போதைய பல்வேறு ஆய்வுகளில் தொடர்ச்சியாக இரத்த தானம் செய்பவர்களுக்கு மாரடைப்பு (Heart attack) ஏற்படும் வாய்ப்பு குறைவு என்று கண்டறியப்பட்டுள்ளது.

* ஹிமோகுளோபின் (Heamoglobin) அளவினைக் கட்டுப்படுத்தவும் சமச்சீராக பராமரிக்கவும் இரத்ததானம் பயன்படுகிறது.

* இரத்த தானம் செய்வதன் மூலம் இரத்த அழுத்தம் சீராகப் பராமரிக்கப்படுகின்றது. இதன் மூலம் பலவிதமான நோய்கள் தவிர்க்கப்படுகின்றன.

* இரத்ததானம் செய்வதன் மூலம் எந்தப் பின்விளைவுகளும் ஏற்படாது.



பட்டியலில் தங்கள் தகவல்களை இணைத்திட

தேனித் தமிழ்ச் சங்கம் இரத்ததானம் (Blood Donation) செய்திட விரும்புபவர்கள் குறித்த விபரங்களைத் தொகுத்து இங்கு தனியாகப் பட்டியலிட்டு வருகிறது.

இரத்ததானம் செய்ய விரும்புபவர்கள், மேற்காணும் அட்டவணைக்கேற்றபடி

பெயர்:

வயது:

பாலினம்:

இரத்த வகை:

ஊர்:

மாவட்டம்:

மாநிலம்:

தொடர்பு எண்:

எனும் வரிசையில் தங்களது தகவல்களை thenitamilsangam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கோ அல்லது 9940785925 எனும் புலனம் (whatsapp) எண்ணுக்கோ அனுப்பி வைத்தால் தங்களது தகவல்களும் இணைக்கப்படும்.

இரத்ததானம் பெற விரும்புபவர்கள், மேற்காணும் பட்டியலில் இருந்து தங்களுக்குத் தேவையான இரத்தப் பிரிவு கொண்டவரைத் தேர்வு செய்து அவருடைய தொடர்பு எண்ணில் தொடர்பு கொண்டு இரத்ததானத்தைக் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம்.

குறிப்பு:

தேனித் தமிழ்ச் சங்கத்தின் இரத்ததானம் குறித்த வலைப்பக்கம், இரத்ததானம் வழங்குபவர் மற்றும் பெற்றுக் கொள்பவர்களுக்கிடையிலான ஒரு தொடர்புப் பக்கமே தவிர, இதில் தேனித் தமிழ்ச் சங்கம் எவ்வழியிலும் பங்கேற்காது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்.


© 2018-2020 தேனித்தமிழ்ச்சங்கம்.ஆர்க் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (www.muthukamalam.com)

(ISSN: 2454-1990)