TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - புரிந்துணர்வு ஒப்பந்தம்

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

புரிந்துணர்வு ஒப்பந்தம்
      

தேனித் தமிழ்ச் சங்கம்

மற்றும்

உத்தமபாளையம், ஹாஜி கருத்தராவுத்தர் ஹவுதியா கல்லூரி

இடையிலேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்

தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் தேனி மாவட்டம், உத்தமபாளையம், ஹாஜி கருத்தராவுத்தர் ஹவுதியா கல்லூரி இடையிலேயான கல்வி மற்றும் கலை, இலக்கியம், பண்பாடு ஆராய்ச்சி சார் பரிமாற்றங்கள், மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்வது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளும் நிகழ்வு 23-10-2019 அன்று கல்லூரியின் முதல்வர் ஹாஜி. முனைவர் எச். முகமது மீரான் அவர்கள் தலைமையில், கல்லூரித் தலைவர் ஜனாப். எஸ். செந்தல் மீரான், கல்லூரியின் செயலாளர் மற்றும் தாளாளர் ஹாஜி எம். தர்வேஷ் முகைதீன், தேனித் தமிழ்ச் சங்கத்தின் துணைச் செயலாளர் அ. முகமது பாட்சா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில், புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கான ஆவணங்களைத் தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் தேனி மு. சுப்பிரமணி மற்றும் ஹாஜி கருத்தராவுத்தர் ஹவுதியா கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் மு.அ. சமது ஆகியோர் பரிமாற்றம் செய்து கொண்டனர். இந்நிகழ்வில் தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் சு.சி.பொன்முடி, பொருளாளர் ம. கவிக்கருப்பையா ஆகியோர் கலந்து கொண்டனர்.


வரையறுக்கப்பட்ட ஆய்வுக் களங்களில் கீழ்க்காணும் பொதுத்தன்மையில் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பினை நல்குவது என ஒரு மனதாகத் தீர்மானிக்கப்பட்டு இவ்வொப்பந்தம் உருவாக்கப் பெற்றுள்ளது.

1. சிறப்புச் சொற்பொழிவுகள், கருத்தரங்குகள், பயிலரங்குகள், மாநாடுகள், ஆவணப்படுத்துதல் போன்றவற்றை இரு நிறுவனங்களும் இணைந்து நடத்துதல்; அறிவியல் சார்ந்த கலைச்சொற்களை உருவாக்குதல், தரப்படுத்துதல், செவ்வியல் மற்றும் அறிவியல் தமிழ் சார்ந்த ஆய்வுகளை இரு நிறுவனங்களும் சிறப்பு உதவித் திட்டத்தில் (Special Assistance Programme - SAP) நடத்துதல், ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய ஆய்வுக் கோவைகளை ISSN/ISBN எண்ணுடன் வெளியிடல், வட்டாரம் சார்ந்த இலக்கியங்களை ஆவணப்படுத்துதல், இந்த ஒப்பந்தம் மூலம் இணைந்து உருவாக்கப்படும் ஆய்வுக்கட்டுரைகள், தொகுப்பு நூல்கள், குறுந்தகடுகள் முதலான வெளியீடுகளை இரு நிறுவனங்களும் இணைந்து வெளியிடுதல்.

2. தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் மு. சுப்பிரமணி அவர்களை ஆசிரியராகக் கொண்டு இணையத்தில் வெளிவரும் ‘முத்துக்கமலம்’ (www.muthukamalam.com) பன்னாட்டுத் தமிழ் மின்னிதழில் (ISSN 2454 - 1990) கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்களின் இலக்கிய ஆய்வுகள் உள்ளிட்ட தமிழ்ப் படைப்புகள் வெளிவர வழிவகை செய்யப்படும்.

3. அறிவுசார் கட்டமைப்பு நிலைகளை மேம்படுத்திக் கொள்வதற்கும் அகத்தூண்டலுக்கும் மட்டுமே இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்படுகின்றது.

4. வேறு ஏதேனும் புதிய நடைமுறைகளைச் செயல்படுத்த வேண்டுமெனில், இரு நிறுவனங்களும் முன்கூட்டியேத் திட்டமிட்டுக் கலந்து ஆலோசனை செய்து பின் எழுதி நடத்திக் கொள்ளலாம். இரு நிறுவனங்களும் இணைந்து நிகழ்த்தும் தத்தம் செயல்பாடுகளைத் தனித்தனியே ஆவணப்படுத்திக் கொள்ளலாம்.

5. ஒப்பந்தத்தின் அடிப்படையில் நிகழ்த்தப்பெறும் செயல்பாடுகள் இரு நிறுவனங்களின் தலைவர்களும் அவரவர் சார்பில் நியமிக்கப் பெறும் ஆய்வுத் திறனையும் பட்டறிவுடன் கூடிய ஒருங்கிணைப்பாளரையும் சார்ந்தவையாகும்.

6. ஒப்பந்தத்தினைக் கொண்டு இரு நிறுவனங்களையும் வேறு எந்த அலுவல் நிலையிலான வேண்டுகோளினையும் கேட்கக் கூடாது. இந்த ஒப்பந்தம் மூன்று ஆண்டுகளுக்கு நடைமுறைப்படுத்தப்படும். இடையில் நிறுத்திக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டால் மூன்று மாதம் முன்னதாக எழுத்து முறையில் அணுகி முடித்துக் கொள்ளலாம். இல்லையெனில் முறைப்படிப் பேசி உடன்பாட்டினை முடிவுக்குக் கொண்டு வரலாம்.

7. ஒப்பந்தக் காலத்தில் இரு நிறுவனங்களும் இக்குறிப்பிட்ட பொருண்மைகளில் வெவ்வேறு தளங்களில் தனித்தனியே ஈடுபட்டுக் கொள்ளவும் செயல்படவும் இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் வழிவகை செய்து தருகின்றது.

8. இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் அறிவு மேம்பாட்டிற்கு மட்டும் ஏற்படுத்திக் கொள்ளப்பெறுகின்றது. வணிகநோக்கத்தில் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது. இரு நிறுவனங்களின் பெயர்களை இருவரும் பயன்படுத்துவதற்குப் முன்பாக விரிவாகக் கலந்தாய்வு செய்து கொள்ள வேண்டும்.

9. ஒப்பந்தக் காலத்தில் இரு நிறுவனங்களும் சேர்ந்து நடத்தத் திட்டமிடப்பெறும் நிகழ்வுகள், கருத்தரங்குகள், கருத்தரங்க முன்மொழிவுகள், அழைப்பிதழ்கள் முதலான அனைத்து ஏற்பாடுகளும் விரிவான, வெளிப்படையான முறையான கலந்தாய்வுகளின் மூலமாகச் செய்து கொள்ளப்பட வேண்டும்.

10. இருநிறுவனங்களும் முன்னரே தீர்மானித்த செயல்பாடுகளைச் செய்தி நிறுவனங்களுக்கு அறிக்கையாக வெளியிடும் பொழுது, இருவரும் எழுத்து வடிவில் இசைவு பெற்றே வெளியிட வேண்டும்.

11. ஒவ்வொரு நிறுவனமும் அடுத்த நிறுவனங்களிடமிருந்து பெற்றத் தகவல்களை மந்தண அறிக்கைகளாகக் கருதிப் பாதுகாக்க வேண்டும். எழுத்து வடிவிலான மற்றும் ஆவண வடிவிலான முன்வரைவுகளை இரு நிறுவனங்களும் நன்கு சோதிக்கப் பெற்றே பரிமாற்றம் செய்துகொள்ள வேண்டும்.

12. இவ்வொப்பந்தம் 15.10.2019 முதல் மூன்று ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும்.


© 2018-2024 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ்

(www.muthukamalam.com)
(ISSN: 2454-1990)